சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மரவள்ளி கிழங்கு விலை மற்றும் விற்பனை நிலை குறித்த முத்தரப்பு ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் ," சேலம் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி பராம்பரியமாக நடைபெற்றுவருகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யக்கூடிய மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை கிடைப்பதற்கும் இம்மரவள்ளிக் கிழங்கின் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்களுக்கு உரிய லாபம் கிடைப்பதற்கும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இச்சூழ்நிலையில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மரவள்ளி கிழங்கின் தற்போதைய விலை குறித்து ஆலோசிக்க இந்த முத்தரப்புக் கூட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது”. எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசும்போது, "சேகோ சர்வ்வில் விவசாயிகளை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவில் ஐவ்வரிசி பாயாசம் வழங்க அரசிற்கு பரிந்துரை செய்ய வேண்டும். ஜவ்வரிசி ஆலைகளில் கலப்படம் செய்யாமல் இருக்க கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு மரவள்ளி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பது குறித்தும் உரிய பயிற்சி வழங்க வேண்டும், கூட்டுறவு ஆலைகள் மூலம் ஜவ்வரிசி உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வதோடு, மரவள்ளிக்கான விலையை ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கவும், மரவள்ளி ஸ்டார்ச் அளவிடும் கருவி மரவள்ளி பயிரிடும் கிராமங்களில் ஆங்காங்கே வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் பேசும்போது, “எலக்ட்ரானிக் ஸ்டார்ச் அளவிடும் கருவி 10 கிலோ அளவிலானது அனைத்து ஆலைகளுக்கும் வழங்க வேண்டும். ஜவ்வரிசி அதிகமாக சேமித்து வைக்க கூடுதலாக கிடங்கு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமெனவும், மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது என்பதற்கான சான்றுடன் உரிமம் பெறுவதற்கோ அல்லது புதுப்பித்து வழங்குவதற்கோ உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”. எனக் கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் மீது உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஜவ்வரிசி ஆலை உரிமையாளர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.