சேலம்: சேலம் அருகே உள்ள அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று (ஆக. 22) காலை ராஜேந்திரன், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செட்டிசாவடி செல்லும் டவுண் பஸ்சில் நடத்துநராக சென்றார். இந்த பேருந்தை ஓட்டுநர் சீனிவாசன் என்பவர் ஓட்டிச் சென்றார்.
இந்த பேருந்து இன்று காலை 8 மணியளவில், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, செட்டிச் சாவடிக்கு புறப்பட்டு சென்றது. இதன் பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்தது. அப்போது இந்த பேருந்து, பசவக்கல் பேருந்து நிறுத்தம் அருகே வந்துகொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. நாயை பார்த்த ஓட்டுநர் சீனிவாசன் நாய் மீது பேருந்து மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டுள்ளார்.
அப்போது பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நடத்துநர் ராஜேந்திரன் அப்படியே கீழே விழுந்து பின்னந்தலை மற்றும் முகம் பகுதியில் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிய ராஜேந்திரனை பயணிகள் அதே பேருந்தில் உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மருத்துவமனையில் ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே நடத்துநர் ராஜேந்திரன் பேருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடையும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:இரு குழந்தைகளை வாய்க்காலில் வீசி தாய் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்...கணவர் கைது