சேலம் மாவட்டம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் சண்முகராஜா. இந்நிலையில் இவர் நேற்று மேட்டூர் அணையின் வலது கரை நீர்தேக்கப் பகுதியில் சந்தேகிக்கும் முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதிக்கு வந்த மீனவர்கள், மேட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்து கிடந்த அவரின் சட்டைப்பையில் ஏடிஎம் கார்டு, ஆதார் அட்டையை கைப்பற்றிய காவல் துறையினர், அவர் சேலத்தைச் சேர்ந்தவர் என்பது அறிந்து கொண்டு அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். இறந்து போன சண்முகராஜா எதற்காக நீர்த்தேக்க பகுதிக்கு வந்தார்? தண்ணீரில் தவறி விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து மேட்டூர் அணையின் வலது கரைப் பகுதியில் கண்காணிப்பு, பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் இதுபோன்ற சந்தேகிக்கும் வகையில் பல மரணங்கள் நடைபெறுகிறது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் இப்பகுதியில் சமூகவிரோத செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகவும் அவற்றைத் தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: விஷவாயு தாக்கி 2 துப்பரவுப்பணியாளர்கள் உயிரிழப்பு!