பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், சபரிராஜன் என்ற ரிஷ்வந்த் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கோவை சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் மீது, கைதிகள் தாக்குதல் நடத்தலாம் என்பதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 22ஆம் தேதி, இவர்கள் நான்கு பேரும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் சேலம் சிறையில் உள்ள சபரிராஜனுக்கு வெப்பத்தின் காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று மீண்டும் சபரிராஜனுக்கு உடல் நலன் பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவருக்கு சேலம் மத்திய சிறை வளாக மருத்துவர்கள் மீண்டும் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சிறையில் உள்ள சபரிராஜன் உடல்நலம் தேறி உள்ளதாகவும், சபரிராஜன் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் சிறைத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் 13 வயது சிறுமி உயிரிழப்பு! பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்?