சேலம்: புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அகிலேஷ் செல்வ மாளிகை நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் கடை ஊழியருடன் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தொழிலுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.10 கோடி கடன் வாங்கி இருந்தார்.
பின்னர் இந்த தொகையை அவரால் கட்ட முடியவில்லை. இதனால் சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் பகுதியில் உள்ள தனது 7 ஏக்கர் நிலத்தை சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பூபதி என்பவருக்கு விற்று உள்ளார்.
ஆனால் இதற்குரிய பணத்தை ரவுடி பூபதி தராமல் இழுத்தடித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த பணத்தை நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் பலமுறை கேட்டு வந்தார். இதில் கோபமடைந்த பிரபல ரவுடி பூபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏகாம்பரத்தின் நகை கடைக்கு வந்து அவரை மிரட்டி அவர் வைத்திருந்த நில பத்திரங்கள் சிலவற்றை பறித்து சென்றதாக தெரிகிறது.
அடுத்தடுத்து இந்த சம்பவங்களால் நகைக்கடை அதிபர் ஏகாம்பரத்திற்கும், பிரபல ரவுடி பூபதிக்கும் தகராறு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பிரபல ரவுடி பூபதியும், அவரது நெருங்கிய நண்பர் பிரவீன்குமார் என்பவரும் கோரிமேடு அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கடத்திச் சென்றனர். அதையடுத்து சேலம் 5 ரோடு பகுதி அருகே கார் சென்றபோது பிரவீன்குமார் காரில் இருந்து குதித்து உயிர் தப்பினார். பின்னர் மருத்துவமனையில் சேர்ந்த பிரவீன்குமார் இது குறித்து அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா தனிப்படை அமைத்தார். இதில் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் விசாரித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ரவுடி பூபதியை மீட்டனர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில் நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் மற்றும் நகை கடை ஊழியர் பாபு கைது செய்யப்பட்டனர்.
தனிப்படை போலீசார் விசாரணையின் போது நகைக்கடை அதிபர் ஏகாம்பரம், ரவுடி பூபதி தன்னிடம் நிலம் வாங்கிக் கொண்டு பணம் தரவில்லை என்றும், இதை கேட்கும் போது ஆள் வைத்த மிரட்டினார். இதனால் அவரை கடத்திச் செல்ல திட்டம் வகுத்தோம். பின்னர் கடத்தி சென்றபோது நாங்கள் சிக்கிக்கொண்டோம் என நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் தெரிவித்த தகவலின் பெயரில் ரவுடி பூபதி கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலுக்கு மூளையாக இருந்த சூரமங்கலத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற மற்றொரு ரவுடியை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆள் கடத்தல் வழக்கில் சேலம் நகைக்கடை அதிபர் கைது செய்யப்பட்டு இருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கைதான ரவுடி பூபதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க:அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து பல கோடி ரூபாய் மோசடி..