சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்ப்புதூர் கிராமம் ராமமூர்த்தி நகரில் வசித்துவந்த மாவோயிஸ்ட் மணிவாசகம், 2019இல் கேரள நக்சல் தடுப்புப் பிரிவு (தண்டர்போல்ட்) காவல் துறையினரால் கேரள மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து 2019 நவம்பர் 15ஆம் தேதி மணிவாசகத்தின் உடல் அவரது சொந்த ஊரில் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் தகனம்செய்யப்பட்டது.
இறுதி மரியாதை நிகழ்ச்சியில், அரசுக்கு எதிராக முழக்கமிட்ட சிலரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 10 பேரை காவல் துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில், வாழப்பாடி மின்னாம்பள்ளியைச் சேர்ந்த செல்வராஜ் (55), ஓமலூரைச் சேர்ந்த பாலன் (41), சேலம் செல்வம் நகரைச் சேர்ந்த சீனிவாசன் (66) ஆகியோரை தீவட்டிப்பட்டி காவல் துறையினர் சில நாள்களுக்கு முன்பு கைதுசெய்தனர்.
இந்த நிலையில் அந்த மூன்று பேரையும் விடுவிக்கக்கோரி அவர்களின் குடும்பத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாகிகளாக உள்ள சீனிவாசன், செல்வராஜ், பாலன் ஆகிய மூவரும் தமிழ்நாட்டு மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தவர்கள்.
இவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் தேசிய தீவிரவாத தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கோயம்புத்தூர் சிறையில் அடைத்தனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட பொய்யான வழக்கை திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொத்தடிமை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி - ஆட்சியர் வேண்டுகோள்