சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்பேரணியானது சேலம் அரசுக் கலைக்கல்லூரி, அஸ்தம்பட்டி, சாரதா கல்லூரி, ஐந்து ரோடு, சோனா கல்லூரி வழியாகச் சென்று பெரியார் பல்கலைக் கழகத்தில் நிறைவடைந்தது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் ராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய செஞ்சிலுவைச் சங்கம் இந்தியாவில் 1920ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா மாநில அளவில் கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்றவை நடத்தப்பட்டன. மேலும் கல்லூரிகளில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டது" என்றார்.
இவ்விழாவில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் முன்னா, துணைத்தலைவர் அனில், ஒருங்கிணைப்பாளர் வடிவேல், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஜியோ ஊழியர்கள் நடத்திய போக்குவரத்து விழிப்புணர்வு பரப்புரை!