சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உள்பட்ட அரசு கலைக்கல்லூரி அருகே சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு உள்ளது.
சேலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினர் இங்கு அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில், முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அம்பேத்கர் சிலை அந்த இடத்தில் இருந்து அகற்றப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன.
இதனையடுத்து சேலம் மாவட்ட பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், சிலையை அகற்றக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று அம்பேத்கர் சிலையை அகற்றக்கூடாது, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி அரசியல் பிரமுகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும், அம்பேத்கர் சிலைக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அம்பேத்கர் இயக்கங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “இந்த மேம்பால பணி நடைபெறுவதால் தற்போது சிலை அகற்றப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதனை தெளிவுப்படுத்தி மேம்பால பணிக்காக அரை நூற்றாண்டு காலமாக உள்ள ஒரு சிலையை அகற்றக்கூடாது.
சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சி, அனைத்து அமைப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கருத்து கேட்டிட வேண்டும். இல்லை என்றால் அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என தெரிவித்தனர்.