காவல் நிலைய விசாரணையில் திருப்தி அடையாத மனுதாரர்களின் மனுக்கள் மீது காவல் துறையின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாநகரில் கடந்த ஜூலை மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடத்திய விசாரணையில் திருப்தியடையாத மனுதாரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.
சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் மனு அளித்திருந்த 291 மனுதாரர்களின் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. ஒவ்வொரு மனுவையும் மனுதாரர், எதிர்மனுதாரர் என இருவரையும் வரவழைத்து நேருக்கு நேராக வைத்து விசாரித்து சமரசம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், “நடப்பாண்டில் இதுவரை 20 ஆயிரத்து 490 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. கடந்த ஜூலை மாதம் மட்டும் இரண்டாயிரத்து 200 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் ஆயிரத்து 900 மனுக்கள் மீது ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 291 மனுதாரர்களின் மனுக்கள் மீது தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மனுக்கள் மீதும் தங்களால் இயன்றவரை விரைவாக தீர்வு காணப்படும்” என்றார்.
இதையும் படிங்க : காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு பெண் காவலர் தீக்குளிக்க முயற்சி!