சேலம் மாநகரத்தில் 144 தடை உத்தரவை தீவிரப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக வாரத்திற்கு இருமுறை மட்டுமே இருசக்கர வாகனங்களில் வெளியே வர முடியும் என்ற புதிய கட்டுப்பாடு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களில் நேற்று சிவப்பு பெயிண்ட் பூசப்பட்டது. கரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் மாநகரில் பொதுமக்கள் தடை உத்தரவை மீறி அலட்சியத்துடன் பகல் நேரங்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக வெளியே வரும் நபர்களை தவிர்த்து தேவையில்லாமல் ஊர் சுற்றும் இளைஞர்களைப் பிடித்து அவர்களை எச்சரித்து அனுப்பினர். அப்போதும் கேட்காமல் வெளியே வரும் சிலரை பிடிக்கும் காவல்துறையினர், அவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கும் பதிவு செய்கின்றனர்.
ஆனாலும் இருசக்கர வாகனங்களில் ஊர்சுற்றும் நபர்கள் அடங்கிய பாடில்லை. இதனையடுத்து சேலம் போலீசார் எடுத்துள்ள புதிய நடவடிக்கையாக வாரத்திற்கு இருமுறை மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்து காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும். பால், மருந்து பொருள்கள் வாங்குவதற்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சேலம் மாநகரில் உள்ள ஐந்து ரோடு, 4ரோடு, 3 ரோடு, அஸ்தம்பட்டி அம்மாபேட்டை கந்தம்பட்டி பைபாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களின் வாகனங்களுக்கு சிவப்பு பெயிண்ட் பூசி அனுப்பினர். வெள்ளி, திங்கட்கிழமைகளில் சிவப்பு பெயிண்ட், சனி, செவ்வாய் கிழமைகளில் மஞ்சள் பெயிண்ட், ஞாயிறு, புதன் கிழமைகளில் பச்சை பெயிண்ட், வண்ணம் பூசாத வாகனங்கள் வியாழக்கிழமை என்ற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்Lள்ளது.
இந்த பெயிண்ட் அடையாளங்களைக் கொண்டு அவர் எந்த நாளில் வெளியே வருகிறார்கள் என்பதை காவல்துறையினர் அறிந்துகொள்ள முடியும். சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பெயிண்ட் பூசப்பட்ட வாகனங்கள் அனுமதிக்காத நாள்களில் வெளியே சுற்றுவதை கண்டால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்வதோடு வாகன உரிமையாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சேலத்தில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடு