சேலம்: மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கஞ்சா ரஸ்க் எடுத்துச் செல்ல முயன்ற ஐந்து பேரில் மூன்று பேர் தப்பிய நிலையில், இருவரை அஸ்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் அரக்கோணம் பகுதியில் கொலை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட பரத்குமார், ஜெகன், யுகேந்திரன், குரு பிரசாத், அஜீத் ஆகியோர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்திப்பதற்காக அரக்கோணத்தைச் சேர்ந்த சசிகுமார், நாமக்கல்லைச் சேர்ந்த சாமிதுரை, மணிகண்டன், மெளலீஸ்வரன் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகியோர் (செப்.18) செவ்வாய்க்கிழமை சிறைக்குச் சென்றனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் அவலம்... சத்துணவு கூடத்தின் மேற்கூரை இடிந்து விபத்து...! நூலிழையில் உயிர் தப்பிய சமையலர்!
அப்போது, அவர்கள் ஐந்து பேரும் சிறையில் உள்ள கைதிகளுக்கு வழங்குவதற்காக வறுத்த ரொட்டி (ரஸ்க்) பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றிருந்தினர். இந்நிலையில், மத்திய சிறையின் தலைமைக் காவலர் காளி பிரகாஷ் சந்தேகத்தின் பேரில் அவர்கள் கொண்டு வந்த ரஸ்க் பாக்கெட்டுகளைப் பிரித்து சோதனை நடத்தினர்.
சோதனையில், ரஸ்க் பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவைக் கொண்டு வந்த மணிகண்டன், மெளலீஸ்வரன், பிரேம்குமாா் ஆகியோா் உடனடியாக அங்கிருந்து வெளியேறி தப்பி ஓடினர். இதில் சசிகுமார் மற்றும் சாமிதுரை ஆகியோர் சிறைக் காவலர்களிடம் பிடிபட்டனர்.
இந்நிலையில், சசிகுமார் மற்றும் சாமிதுரை ஆகியோரை அஸ்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் கொண்டு வந்த ரஸ்க் பாக்கெட்டுகளில் இருந்து 80 கிராம் கஞ்சா, 20 கிராம் சிகரெட் துகள்கள் மற்றும் சிகரெட் புகைக்க பயன்படுத்தப்படும் 30 பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அஸ்தம்பட்டி காவல் துறையினர், 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்பக்க டயர் வெடித்து கோர விபத்து.. சாலையோர புளிய மரத்தில் மோதிய தனியார் பேருந்து.. 25 பேர் படுகாயம்!