சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியில் உள்ள பழமையான கைலாசநாதர் ஆலயத்திற்குச் சொந்தமான எட்டரை ஏக்கர் நிலம் கருப்பூர் அருகே உள்ளது. இந்த நிலத்தில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்தது.
இந்நிலையில், கோயில் நிலத்தில் இருந்த பனை மரங்களை பூசாரி கீர்த்திவாசன் நேற்று வெட்டி விற்றதாக சேலம் திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தவிர இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளிடமும் அவர் புகார் செய்துள்ளார்.
இதனையடுத்து கருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் அங்கப்பன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், பனைமரங்கள் வெட்டப்பட்ட பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது கோயில் நிலத்தில் இருந்த பனை மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு கீழே சாய்க்கப்பட்டு இருப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
பின்னர், அப்பகுதியில் இருந்த இரு டிராக்டர்களையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், பூசாரி கீர்த்திவாசன், டிராக்டர் ஓட்டுநர்கள் வேலுசாமி, மாரிமுத்து, மரம் வெட்டி டிராக்டரில் ஏற்ற உதவிய துளசி, பொன்னுசாமி, பழனிச்சாமி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஆறு பேரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தொடரும் சந்தன மரக் கடத்தல்!