சேலம்: அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை, தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளில் விவசாயிகள் கடைகள் அமைத்து தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
ஆனால், அண்மைக் காலமாக கடைகள் அமைக்க விவசாயிகளை அனுமதிக்காமல், இடைத்தரகர்களை விவசாயிகள் போல, கடைகள் அமைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய வேளாண்மைத் துறை அதிகாரிகள் அனுமதித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பால சுப்பிரமணி, சூரமங்கலம் உழவர் சந்தையில் விவசாயிகளை அனுமதிக்காமல், மாறாக தனி நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உழவர் சந்தைகளில் கடை ஒதுக்கீடு செய்வதாகவும், உண்மையான விவசாயிகளிடமிருந்து எந்த ஒரு பொருட்களையும் கொள்முதல் செய்வதில்லை என்றும் புகார் எழுந்தது.
மேலும் அவர், பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வரும் தக்காளி, பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை மட்டுமே இந்த சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகளிடம் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து, உழவர் சந்தைகளில் கடைகள் வைத்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியருக்கு பலமுறை புகார் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினராக உள்ள அருள், வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிரமணி மற்றும் அவருக்கு துணை நின்று அடாவடி வசூல் செய்யும் பசுபதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களை பணி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி உழவர் சந்தை முன்பு அமர்ந்து இன்று அறப்போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்எல்ஏ அருள், “விவசாயிகளை வாழ வைக்க பல கோரிக்கைகள் வைத்தும் இந்த அதிகாரி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயத்தை அழித்து வருகிறார். மாதம் 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார். உழவர் சந்தையில் நடைபெறும் முறைகேடுகளை தட்டி கேட்கும் விவசாயிகளிடம் ஆய்வு செய்து, மிரட்டி வெளியேற்றி வருகிறார்.
மேலும் இந்த அதிகாரி, சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரை தகாத வார்த்தைகளால் பேசிய தொலைபேசி உரையாடல்கள் வெளி வந்துள்ளன. இந்த நிலையில், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும். விவசாயிகளை கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார். பாமக எம்.எல்.ஏ அருளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவாக 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: வருகின்ற 9ஆம் தேதி லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் - லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்