சேலம் மாவட்டத்தில், முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏற்காட்டில், ஊரடங்கு உத்தரவு காரணமாக சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைத் தவிர, மீதமுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, சுற்றுலாத் தலத்திற்கு, சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று (ஜூன்-1) முதல் ஏழுக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்து இயக்கத்தால், ஏற்காட்டிற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்காடு சுற்றுலாப் பகுதியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்று கூறி, பேருந்து போக்குவரத்தை நிறுத்த ஏற்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சிவசக்தி ஏற்காடு வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து அந்த மனுவில், உடனடியாக சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, ஏற்காட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்தை நிறுத்த வேண்டும் எனவும்; கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.