சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியேரிபட்டி ஊராட்சிப் பகுதியில், சேலம் மக்களவை உறுப்பினர் பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஏரியில் வேலை செய்து கொண்டிருந்த பொதுமக்களிடம் பார்த்திபன் நலம் விசாரித்து உரையாடினார்.
அதில், இளைஞர் ஒருவர் அவரிடம், 'நானும் என் சகோதரரும் வங்கியில் கடன் வாங்கி படித்துள்ளோம். வங்கிக் கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறித் தான் , ஓட்டு கேட்டு வந்தீர்கள். அதை நம்பி வாக்களித்தோம். தற்போது ஜெயித்து விட்டீர்கள். ஆனால், ஏன் இன்னும் கல்விக் கடனை தள்ளுபடி செய்யவில்லை' என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு மக்களவை உறுப்பினர் பார்த்திபன், 'நாங்கள் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆகையால் எதையும் செய்ய முடியாது' எனக் கூறினார். அங்கிருந்த மக்கள் 'நீங்கள் எம்.பி.யானதும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்கிறோம் எனச் சொல்லி மட்டும்தான் வாக்கு கேட்டீர்கள், தற்போது நீங்க எம்.பி. தானே? ஏன் கடனை தள்ளுபடி செய்யவில்லை' என்று கேள்வி கேட்டனர்.
இதற்குப் பதிலளிக்காமல் எம்.பி. பார்த்திபன் தான் வந்த காரில் ஏறி வேகமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். பொதுமக்கள் எம்.பி. பார்த்திபனிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் காணொலி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்