சேலம் மாநகராட்சியில் உள்ள கோட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துவந்தது.
இன்று காலை மாநகராட்சி அலுவலர்கள் கோட்டை பகுதிக்கு வந்து நவீன திருமண மண்டபம் மற்றும் வணிக வளாகம் கட்ட ஏற்பாடு செய்த இடத்தில் இருக்கும் மரங்களை வெட்ட முயற்சி செய்தனர். பின்னர் ஓர் பெரிய மரம் வெட்டப்பட்டது.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த இடத்தில் திரண்டு, மரம் வெட்டக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த சேலம் டவுன் உதவி ஆணையர் ஈஸ்வரன் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். அப்போது பொதுமக்களுக்கும் மாநகராட்சி அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே, அங்கு வந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், தான் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சிலர் இந்தப் பகுதியில் மரம் வெட்டுவதைப் பார்த்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுத்திருந்ததாகவும், இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறி காவலர்களிடம் வாதிட்டார். இதனால் மேலும் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மாநகராட்சி அலுவலர்களும் காவல்துறை அலுவலர்களும் சில மரங்களை மட்டும் வெட்டிக் கொள்வதாகவும், மற்ற மரங்களை அப்படியே விட்டுவிடுகிறோம் எனவும் பொதுமக்களுடன் சமாதானம் பேசியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.