சேலம்: பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை மாசுப்படுத்தி மக்களின் உயிரைப் பறிக்கும் ஏஎல்சி சாயம் ஏற்றும் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த சன்னியாசிகுண்டு பகுதிவாசிகளான சரோஜா, ஈஸ்வரன் கூறுகையில், ”கடந்த 20 ஆண்டுகளாக ஏஎல்சி நிறுவனத்தின் சாயக் கழிவுகளால் சன்னியாசிகுண்டு, எருமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது.
இது தொடர்பாக பல ஆண்டுகளாக தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் மனுக்கள் அளித்து வருகிறோம். போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
ஆனால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று மட்டும் கூறும் மாவட்ட நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுப்புறச் சூழலை நிலத்தடி நீரை விஷமாக வரும் ஏஎல்சி நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் குடிநீர் நஞ்சாகியும் காற்று விஷமாகியும் உள்ளது. மேலும் புற்றுநோய், தோல் நோய் உள்ளிட்ட பலதரப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
கடந்த ஆண்டுகளில் 13 பேர் நோய்வாய்ப்பட்டு இறந்து உள்ளனர். சுமார் 1,500 குடும்பங்கள் வசிக்கும் சன்னியாசிகுண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நிலத்தடி நீரை விஷமாக்கி வரும் ஏ.எல்.சி நிறுவனத்தை இயங்க மாவட்ட நிர்வாகம் எப்படி அனுமதிக்கிறது என்று புரிய வில்லை. எனவே உடனடியாக புதிய ஆட்சியராவது சுற்றுப்புற சூழலை நஞ்சாக்கி வரும் ஏ.எல்.சி நிறுவனத்தை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும். சாய கழிவுகள் நிலத்தடி நீரில் கலக்காத வகையில் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: போக்குவரத்து நெரிசல் மிக்க சீலநாயக்கன்பட்டி பகுதியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்