டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நிகழ்வைத் தொடக்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா, கருப்பண்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அணையிலிருந்து வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இன்று இரவுக்குள் படிப்படியாக அதன் அளவு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், "டெல்டா பாசன விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, மேட்டூர் அணையிலிருந்து ஆண்டு தோறும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு குறிப்பிடப்பட்ட தேதியான ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தண்ணீர் வீணாவதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை உணர்ந்தும், பொது மக்கள் அத்தியாவசித் தேவைகள் இன்றி வீடுகளைவிட்டு வெளியேறுவதும் அலட்சியமாக இருப்பதும் வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்கின்ற பொய்யான தகவல் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது. இது போன்ற வதந்திகளை பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
மேலும், ”தமிழ்நாட்டில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்படும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள்மீது சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவை விரட்ட சீரக நீரை குடிக்கவும்: மருத்துவராக மாறிய மீன்வளத்துறை அமைச்சர்