சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுககா அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் திருச்செங்கோட்டிலிருந்து பெங்களூருக்கு சக்திவேல் என்பவர் லாரி ஓட்டி வந்தார்.
மேம்பாலத்தில் லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநர் சக்திவேலுக்கு வலிப்பு வந்துள்ளது. இதில் ஓட்டுனர் சக்திவேல் துடித்துக் கொண்டிருந்தார். இதனை அடுத்து சக்திவேல் ஓட்டி வந்த லாரி அவருடைய கட்டுப்பாட்டை இழந்து பின் நோக்கி வேகமாக இறங்கியது.
அந்த நேரத்தில் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்ற ரயில்வே காவலர் குடும்பத்துடன் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு காரில் பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.
லாரி பின் நோக்கி இறங்கி வருவதைக் கண்ட சண்முகம் உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு லாரியை நோக்கி ஓடிச் சென்றார். ஓடிய வேகத்தில் லாரியின் டிரைவர் சீட் பக்கம் ஏறி உள்ளே குதித்து டிரைவரை ஓரமாக அமரவைத்து விட்டு உடனடியாக பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார் .
டிரைவர் சக்திவேல் வலிப்பு நோயால் துடிப்பதைக் கண்டு அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். ரயில்வே காவலர் சண்முகத்தின் இந்த அசாத்திய துணிச்சல் காரணமாக ஓமலூர் மேம்பாலம் பகுதியில் நடக்கவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ரயில்வே காவலர் சண்முகம் ஏற்கனவே, சென்னை ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறும்போது நிலைத்தடுமாறி விழுந்த பயணியை காப்பாற்றியவர் என்பதும் அதற்காக தமிழ்நாடு அரசின் வீரதீர செயலுக்கான விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
அரசு மருத்துவமனையில் மெழுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் - நோயாளிகள் அச்சம்