சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்த கரடு பகுதியில் நேற்று (ஏப்ரல் 15) மாலை திடீரென, சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது. அதில் 40க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின. இந்த தீ விபத்தில் மூன்று பேர் காயம் அடைந்தனர். மேலும் 40 குடும்பத்தினர் தங்களது குடிசைகளை இழந்தனர்.
தீ விபத்து குறித்து தகவலறிந்த ஏற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் சித்ரா, தமிழ்நாடு தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் ஆகியோர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர்.
தொடர்ந்து தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எதிர்பாராத தீ விபத்து இது. தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் முதலமைச்சரின் உத்தரவின்பேரில் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும். தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். இந்த 144 தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் வரை அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை அரசு வழங்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் வேண்டுகோள் - எண்ணூரில் ஏற்பட்ட தீ விபத்து!