சேலம்: கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து சொகுசு பேருந்து ஒன்று சேலம் மாவட்டம் மேட்டூர் வழியாக, நீலகிரி மாவட்டம் ஊட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த சொகுசு பேருந்து, சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த, மேச்சேரி அருகே உள்ள திமிரி கோட்டை பகுதியில் இன்று அதிகாலை வந்தபோது, கேரள மாநிலத்திலிருந்து ஆந்திராவிற்கு மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்னப்பன் மற்றும் அவரது உதவியாளர் பழனிசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி போலீசார், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தால் சொகுசு பேருந்தில் வந்த பயணிகள் சிலர் காயம் அடைந்த நிலையில், அவர்களையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மேட்டூர் மற்றும் சேலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை விபத்து காரணமாக மேட்டூர்-சேலம் நெடுஞ்சாலையில், 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உயிரிழந்த ஓட்டுநர்களின் உடல், சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையில் உள்ளதாகவும், பரிசோதனை முடிந்த பிறகு உறவினர்களிடம் அவர்களின் சடலங்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் மேச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து மேச்சேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ஆபாசமாக போட்டோ எடுத்த கடை ஓனர் மீது புகார்!