சேலம்: வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். அந்தப் பகுதியில் விவசாயம் செய்து வந்த இவர் சிறிய அளவில் கடை ஒன்றையும் நடத்தி வந்தார்.
வியாபாரி அடித்துக் கொலை
கடந்த 22ஆம் தேதி, முருகேசன் தனது நண்பர்களான சிவன் பாபு, ஜெய்சங்கர் ஆகியோருடன் கருமந்துறை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அங்கிருந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, பாப்பநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச் சாவடி அருகே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த முருகேசனை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, முருகேசனை சரமாரியாகத் தாக்கி உள்ளார்.
அந்த தாக்குதலால் முருகேசன் மயங்கி சாலையில் விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார் .
இதனையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, அவர் ஆத்தூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை
இந்த நிலையில், முருகேசன் இதயத்தில் ரத்தம் உறைந்து இறந்ததாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
உடலில் பல இடங்களில் காயம் இருந்ததாகவும், குறிப்பாக தாடை, மார்புப் பகுதியில் காயம் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்புப் பகுதியில் காயம் இருந்த நிலையில், நுரையீரல் மற்றும் இதயத்தில் ரத்தம் குறைந்துள்ளது. இதனால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து அதில் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரையீரல், இதயத்திற்குள் ரத்தம் கட்டியிருந்ததால் முருகேசன் இறந்திருக்கலாம் எனப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளதால், அது காவல் துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சேலம் சரக டிஐஜி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனடிப்படையில் சேலம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், முதல்கட்ட விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார். டிஐஜி மகேஸ்வரியும் தனியாக அறிக்கை அனுப்ப இருக்கிறார்.
இந்த வழக்கின் விரிவான விசாரணைக்கு ஆத்தூர் உதவி கண்காணிப்பாளர் இமானுவேல் ஞானசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட விரிவான அறிக்கையை மாநில உரிமை ஆணையத்திற்கு காவல் துறை சார்பில் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: போலீஸ் தாக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம்: யார் மீது தவறு - வெளியானது புதிய காணொலி