சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியில் உள்ள சாரதா கல்லூரி சாலை, ராமகிருஷ்ணா சாலை, ஐந்து சாலை பகுதிகளில் செல்லும் பேருந்துகளில் பயணிகளிடம் அடிக்கடி செல்ஃபோன் திருடுப்போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்தத் திருட்டில் ஈடுபடுபவரை பிடிக்க சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை குழுவில் அழகாபுரம் காவல் ஆய்வாளர் கந்தவேல், காவலர்கள் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருந்தனர். தீபாவளியை முன்னிட்டு அழகாபுரம் பகுதியில் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண் பயணியிடம் செல்ஃபோன் திருடியுள்ளார். இதனையறிந்த மற்ற பயணிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்து அழகாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அனிதாவை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த செல்ஃபோனை கைப்பற்றி அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதில், அனிதா பேருந்துகளில் சென்று பயணிகளிடம் செல்ஃபோன் திருடிவந்ததை ஒப்புக்கொண்டார். திருடிய செல்ஃபோன்களை குறைந்த விலைக்கு அவர் விற்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் அனிதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.