சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதி கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சேலம் உருக்காலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் வடமாநிலங்களில் 30 நாள்களில் கட்டமைக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 12 நாள்களில் உருவாக்கப்பட்டு நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.
சேலம் உருக்காலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், முதலமைச்சராகப் பதவி ஏற்று 21 நாள்கள் தான் ஆகிறது. கரோனா தொற்று பரவலை தடுக்கவும், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் 11,500 படுக்கைகள் உள்ளன. தற்போது சுகாதாரத்துறை புள்ளி விவரத்தின்படி 6, 338 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 7, 000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் நாளொன்றுக்கு 1, 412 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது நாளொன்றுக்கு 5, 820 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் நோய்த் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆக்சிஜன் வசதி இல்லை என எதிர்கட்சித் தலைவர் கூறுகிறார். கடந்த ஆட்சியில் மாவட்டத்திற்கு 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. தற்போது 27 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணி குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்கு அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு அரசுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவித்திருக்கலாம்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நோய்த் தொற்றில் அரசியல் வேண்டாம், குற்றச்சாட்டு சுமத்த வேண்டாம், அனைத்து மக்களும் சகஜ நிலைக்கு திரும்பவும், தரமான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், சேலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்திவருகிறோம்.
கடந்த ஆட்சியில் 230 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வசதிதான் இருந்தது. அரசு பதவியேற்ற 21 நாள்களில் 650 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் பெற்று மருத்துவமனைகளுக்கு வழங்கி வருகிறோம். அரசு மீது குற்றச்சாட்டு தெரிவித்து அரசியல் செய்ய வேண்டாம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
மாறாக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மாலை ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைகளில் எதிர்கட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
அரசியல் பாகுபாடு இல்லாமல் மக்கள் பணியாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தான் உடல் அடக்கம் செய்யப்படுகின்றன. எதிர்கட்சித் தலைவர் அரசியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்.
கரோனா தொற்றால் யாரும் இறந்துவிடக் கூடாது என்ற வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2, 000 மருத்துவர்கள், 6,000 செவிலியர், 2,000 தொழில்நுட்ப பணியாளர்கள் என 10 ஆயிரம் பேரை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 68 மருத்துவர்கள், 130 செவிலியருக்கு நேர்காணல் நடத்தப்பட்டு பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பணி நியமனம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் மருத்துவத் தேவைக்கான கட்டமைப்புகளை உருவாக்க முதலமைச்சர் முயற்சி எடுத்துள்ளார். எதிர்வரும் காவலங்களில் மாநிலத்தின் மருத்துவத் தேவையைப் தன்னிறைவு செய்து கொள்ளும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கும். சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி போட தகுதியான 28 லட்சம் பேர் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 12 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது 60 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மாவட்டத்தில் 32 சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 177 மண்டல அலுவலர்களை பிரித்து கரோனா தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இங்கு கரோனா எண்ணிக்கையை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சேலம் மாநகரப் பகுதியில் தடுப்பூசி போடும் மையங்களை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி பகிர்வில் வளர்ந்த மாநிலங்களுக்கு அநீதி: பிடிஆர் அதிரடி பேச்சு