தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி காலை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.
முன்னதாக, மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் கல்லணையில் நாளை (ஜூன் 9) ஆய்வு நடத்தி, அங்கு தூர்வாரும் பணிகளை பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து திருச்சி வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 5.45 மணிக்கு சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து புறப்பட்டு சேலம் அஸ்தம்பட்டியிலுள்ள ஆய்வு மாளிகையில் முதலமைச்சர் இரவு தங்குகிறார். பின்னர், நாளை மறுநாள் ( ஜூன் 10 ) காலை 10 மணிக்கு மேட்டூர் அணை பகுதிக்கு வந்து சேர்ந்து, 10:30 மணியளவில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்காக தண்ணீரை முதலமைச்சர் திறந்து விடுகிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சேலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அங்கிருந்து தனி விமானம் மூலம் பகல் 12 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்வார் என்று சேலம் மாவட்ட காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதலமைச்சர் வருகைக்காக ஏற்பாடுகள், தூர்வாரப்படும் பகுதிகள் உள்ளிட்டவைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.