சேலம் மாவட்டம், கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான பட்டயக் கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், மக்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செ.செம்மலை ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அரசுப் பள்ளிகளில் பட்டயக் கணக்காளர் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
2019ஆம் ஆண்டு மட்டும் சுமார் 25 ஆயிரம் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படும் 70 பயிற்சி மையங்களில் நமது பயிற்சி குழுவை சேர்ந்த 500க்கு மேற்பட்ட பட்டயக் கணக்காளர்கள் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சியளிப்பார்கள்.
இதேபோன்று வருகின்ற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் காலணிகளுக்கு பதிலாக ஷுக்கள் வழங்கப்படவுள்ளது.
அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான கல்வியினை வழங்கும் வகையில் 92,000 ஸ்மார்ட் போர்டுகள் டிசம்பர் மாதத்திற்குள் வழங்கப்படும். இந்தியாவின் எதிர்காலம் மாணவ மாணவியர்களாகிய உங்களின் கைகளில்தான் உள்ளது. அதனை உணர்ந்து அனைவரும் நல்ல முறையில் கல்வி பயின்று தங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திட வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.