மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்காக இன்று (ஆக. 17) காலை தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சரோஜா, கருப்பண்ணன் ஆகியோரும் பங்கேற்று கிழக்கு, மேற்கு கால்வாய்களில் தண்ணீர் திறந்து விட்டனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிகல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழ்நாடு முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பிறகு மேட்டூர் அணை, பவானிசாகர் அணை உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன.
மேலும் மேட்டூர் அணையில் தொடர்ந்து 303 நாள்களுக்கு 100 அடிக்கு குறையாமல் நீர் மட்டம் இருந்து வருகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் குடிமராமத்து திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம் இரண்டாவது ஆண்டாக சிறப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. அரசர்கள் காலத்தில் நடைபெற்றது போல ஏரிகள், குளங்கள் சீரமைக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கால்வாய் பாசனத்திற்காக இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .
விவசாயத்திற்கு தேவையான உரங்கள், விதை நெல் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. முதலமைச்சரின் பல்வேறு திட்டங்களால் விவசாயிகளின் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது. ஆசிய அளவில் மிகப்பெரிய கால்நடை பூங்கா சேலம் மாவட்டம், தலைவாசலில் தொடங்கப்பட்டுள்ளது .
முதலமைச்சரது உத்தரவின்படி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் முறையில் இன்று முதல் தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் சேர வரும் 24ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்ப் பலகை அகற்றப்பட்டதா? தென்னக ரயில்வே சொல்வது என்ன?