சேலம்: கரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பொதுப்போக்குவரத்துக்குத் தடைவிதித்தது. பின்னர், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து, மாநிலத்தில் போக்குவரத்து சேவையை படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலை, மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளுக்கு, கடந்த எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது.
சேலம், தருமபுரி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து மாதேஸ்வரன் மலைக்கு தற்போது 12 அரசுப் பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்பட்டுவருகிறது. பேருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த எட்டு மாதங்களாக பேருந்து போக்குவரத்து இல்லாததால் சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மாதேஸ்வரன் மலைக்குச் செல்ல முடியாமல் இருந்தனர். இந்த நிலையில் பேருந்து போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாதேஸ்வரன் மலை கோயில் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக இன்று ஏராளமான பயணிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சேலம் மண்டலப் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் பேருந்து தட எண் மாற்றங்களால் மக்கள் குழப்பம்!