காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களாக வறட்சி நிலவுவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தது. இதனையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இன்று (நவ 27) காலை 8 மணி நிலவரப்படி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக 500 கன அடி நீரும் மேற்கு, கிழக்கு கால்வாய் பாசனத்திற்காக 250 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடியாகும். நேற்று முன்தினம் (நவம்பர் 25) வினாடிக்கு 7 ஆயிரத்து 89 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (நவம்பர் 26) 6 ஆயிரத்து 361 கனஅடியாக குறைந்தது. நீர்திறப்பு குறைவால், நேற்று முன்தினம் 98.58 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 98.95 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 27) காலை 99.8 அடியை எட்டிய நீர்மட்டம் 12:00 மணியளவில் 100 அடியை எட்டியது.
நடப்பாண்டில் நான்காவது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து 8,111 கன அடியாகவும் அணையின் நீர் இருப்பு 64 டிஎம்சி ஆகவும் உள்ளது.