சேலம்: காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கி வருகிறது. தமிழகத்தின் பாசனத்துக்குத் தேவையான நீரின் பெரும்பகுதியை இது வழங்குகிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமாக கட்டப்பட்ட மேட்டூர் அணை இன்று (21.08.2023) தனது 90 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள மெக்காரா என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழியாக வளைந்து ஓடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
குறிப்பாக தமிழகத்தின் வழியாக 800 கிலோ மீட்டர் தூரம் கடந்து, காவிரி ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்யும் பருவ மழையினால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.
இதனால் விவசாய பயிர்கள் நாசம் அடைவதை தடுப்பதற்காக பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் 1925 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்போதைய தலைமை வடிவமைப்பு மற்றும் கண்காணிப்பு இஞ்ஜினியர் கர்னல் டபிள்யூ . எல். எல்லீஸ், அணை நிர்வாக என்ஜினியர் வெங்கட்ராமையா, முதன்மை தலைமை இன்ஜினியர் முல்லிங்கஸ் ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக அணை கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
இவ்வாறு தொடங்கப்பட்ட அணையின் கட்டுமான பணி, சுமார் ஒன்பது ஆண்டுகளாக நடந்து 1934 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி, அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி என்பவர் அணையை திறந்து வைத்தார்.
அவரின் நினைவாகவே மேட்டூர் அணைக்கு ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று பெயரிடப்பட்டது. இதை காலப்போக்கில் மேட்டூர் அணை என்று மக்கள் அழைத்து வருகின்றனர். ரூபாய் 4 கோடியே 80 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த அணை தமிழகத்திற்கு ஆங்கிலேயர்கள் வழங்கிய வரப்பிரசாதம் என்றால் அது மிகையல்ல.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மற்றும் 12 டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை இன்றளவும் உயிர் நாடியாக விளங்குகிறது. மேட்டூர் அணையின் நீளம் 5300 அடி. அணையின் நீர் தேக்கப் பகுதி 59.25 சதுர மைல். அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டி.எம்.சி. அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடிவரை தண்ணீர் சேமித்து வைக்க முடியும்.
பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விடுவதற்காக அணையின் நீர்மட்ட அளவை பொறுத்து மேல்மட்ட மதகு , கீழ்மட்ட மதகு, மின் நிலை மதகு என்று மூன்று நிலை மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணையின் இடது கரை பகுதியில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டும் நிலையில் உபரி நீர் திறந்து விடுவதற்காக 16 கண் மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு மதகும் 20 அடி உயரமும் 60 அடி நீளமும் கொண்டதாகும். இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகள் அதற்குரிய தளவாடங்கள் அனைத்தும் இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மதகுகளை இயக்க 16 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த மின் மோட்டார்கள் கைகளாலும் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 4 லட்சத்து 410 கன அடி நீரை வெளியேற்றலாம். இது தவிர அணையின் வலது கரை பகுதியில் மண் கரை கொண்ட வெள்ளப் போக்கு 814 அடி நீளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்பாராத வகையில் மிக அதிக அளவில் தண்ணீர் வந்தால் அணைக்கு எவ்வித சேதமும் இன்றி அதிக அளவு வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வினாடிக்கு 50 ஆயிரத்து நானூறு கன அடி வரை தண்ணீரை வெளியேற்றலாம். அணையின் மேல் மட்ட மதகு, கீழ் மட்ட மதகு மற்றும் மின் நிலை மதகு வழியாக வினாடிக்கு 60,000 கன அடி வரை தண்ணீரை வெளியேற்ற முடியும். மேட்டூர் அணை கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்னதாக தென்மேற்கு பருவ மழை காலங்களில் வினாடிக்கு 5 லட்சம் கன அடி வரை தண்ணீர் வந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பருவமழை காலத்தில் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரித்து இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு ஆக்ரோசமாக பெருக்கெடுத்து வந்த காட்டாற்று வெள்ளத்தை தடுத்து நிறுத்தும் பணியை மேட்டூர் அணை தற்போது சிறப்பாக செய்து வருகிறது. பருவ மழை காலத்தில், அணை கட்டப்பட்ட பிறகு 1965 ஆம் ஆண்டு அதிகபட்சமாக வினாடிக்கு 3 லட்சத்து 1052 கன அடி தண்ணீர் வந்தது.
அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 730 கன அடி தண்ணீர் வந்தது. 2005ஆம் ஆண்டு அதிகபட்சமாக விநாடிக்கு 2 லட்சத்து 41,300 கன அடியும், கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சத்து நாலாயிரம் கன அடி வரையும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது.
ஆண்டுதோறும் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த பாசனத்தின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பும் காலங்களில், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு கடலில் கலக்கிறது. இதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் செய்வதற்காக மேட்டூர் அணையின் உபரி நீர் திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட தாலுகாக்களைச் சேர்ந்த சுமார் 100 ஏரிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று நிரப்புவதற்காக இந்த திட்டம் வகுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நேரங்களில் இந்த உபரி நீர் திட்டத்தின் மூலம் பல்வேறு ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வினாடிக்கு பல லட்சம் கன அடி வீதம் வந்த காட்டாற்று வெள்ளத்தை தனது கட்டுக்குள் வைத்து தமிழக மக்களுக்கு பயனளித்த மேட்டூர் அணை தனது 90 வது ஆண்டில் காவிரி நீரை பெறுவதற்காக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று இன்று, 54 அடியில் உள்ளது.
அணையின் நீர் இருப்பு 20.90 டிஎம்சி ஆகவும், நீர்வரத்து 13 ஆயிரத்து 159 கன அடியாகவும் உள்ளது. காவிரி டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் ஆகஸ்ட் மாதத்தில் பல ஆயிரம் கன அடி முதல் பல லட்சம் கன அடி வரை தண்ணீர் காவிரியில் இருந்து வருவது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரையும் மாநில அரசு திறந்துவிட மறுக்கிறது. இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் செய்யப்பட்டுள்ள குறுவை சாகுபடி கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டூர் அணை கட்டப்பட்ட பிறகு கடந்த 1947 ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதியும், 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதியும் மின்னல் தாக்குதலுக்கு ஆளாகியது. ஆனால் இந்த இரண்டு முறையும் மின்னல் தாக்கப்பட்ட நிலையிலும் அணை எவ்வித சேதமும் இன்றி கம்பீரமாக காட்சியளிக்கிறது.
மேட்டூர் அணையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இரண்டு மின் நிலையங்களிலும் சேர்த்து சுமார் 250 மெகாவாட் மின் உற்பத்தியும், காவிரி ஆற்றின் பாதையில் உள்ள செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை உள்ளிட்ட ஏழு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கதவனை மின் நிலையங்கள் மூலமும் தலா 30 மெகாவாட் என 210 மெகா வாட் மின் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணை மின் உற்பத்தியில் மட்டும் இல்லாமல் மீன் உற்பத்தியிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. அதாவது மேட்டூர் காவிரி பாலம் அருகே தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மீன் விதை பண்ணை மூலம் கட்லா, ரோகு, மிருகால் போன்ற மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு அவை ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சி பெற்றவுடன் மேட்டூர் அணைக்கு எடுத்துச் சென்று வளர்ப்புக்காக விடப்படும்.
அவை நன்கு வளர்ந்தவுடன் மேட்டூர் அணையில் உரிமை பெற்ற மீனவர்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு மேட்டூர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேட்டூர் அணையின் மூலம் சேலம் மாநகராட்சி, வேலூர் மாநகராட்சி, ஆத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டம், காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், பி என் பட்டி வீரக்கல் புதூர் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கும் இந்த அணை ஆதாரமாக திகழ்ந்து வருகிறது.
இதையும் படிங்க: காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் புதிய அமர்வு..!