சேலம் மாநகரில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் 289 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதில் மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் மட்டும் 137 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டுவரும் மீன் மற்றும் இறைச்சி கூடம், சூரமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் மாநகராட்சி மீன் மார்க்கெட் ஆகிய இரண்டு இறைச்சி கூடங்களுக்கும் மறு உத்தரவு வரும் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் நேற்று உத்தரவிட்டார்.
அதன்படி இன்று மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள இறைச்சி கடைகள் மூடப்பட்டன. இந்த அறிவிப்புக்கு சூரமங்கலம் மீன் மார்க்கெட் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்காக ஏற்கனவே வரவழைக்கப்பட்ட மீன்கள் இன்று விற்பனை செய்ய முடியாமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.
மேலும் இன்று விடுமுறை என தெரியாமல் மீன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாநகரில் உள்ள சாலையோர மீன் மற்றும் இறைச்சி கடைகள், தனியார் இறைச்சி கடைகள் வழக்கம் போல செயல்பட்டு வருவதால் வழக்கத்தை விட கூடுதலாக அங்கு வாடிக்கையாளர்கள் குவிந்து உள்ளனர்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பா?