சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பொதுப்பணித் துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.
கூட்டததிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை தடுக்க 2 வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். குறிப்பாக சேலம் உளுந்தூர்பேட்டை நான்கு வழி சாலை 20 இடங்களில் இரண்டு வழி சாலையாக உள்ளது. அதனை 4 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் குறித்து பொறியாளர் குழு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராம சாலைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எட்டுவழிச் சாலை என்பது ஒன்றிய அரசு கொள்கை முடிவு. எனவே அதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார்" என்றார்.