புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு இன்று காலைமுதல் அரசுப் பேருந்துகள் சேவை வழங்கப்பட்டுவருகிறது. கரோனா பொது முடக்கத்தால், கடந்த 6 மாத காலமாக ஏற்காட்டிற்கு சேலத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், ஏற்காடு, அதனைச் சுற்றியுள்ள 67 மலைகிராம மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
இந்நிலையில் பொதுமக்கள் சேலம் ஆட்சியர் சி.அ. ராமனைச் சந்தித்து அரசுப் பேருந்துகளை ஏற்காட்டுக்கு சேலத்திலிருந்து இயக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர். அதன்படி இன்று (அக். 28) காலை முதல் சேலத்திலிருந்து ஏற்காட்டுக்கு மூன்று அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் கூறுகையில், "சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இன்று (அக். 28) காலை முதல் ஏற்காட்டிற்குப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
பேருந்தில் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டும் பயணிகளின் வரவேற்பைப் பொறுத்தும், கூடுதலாகப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏற்காடு மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: காலாவதியான கூடாரமாக தமிழ்நாடு பாஜக உள்ளது - திருமாவளவன்