சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தலைவாசல் தாலுகாவில் உள்ள நாவக்குறிச்சி கிராமத்தில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிடாரி அம்மன் கோயில், அய்யனார் கோயில், கம்ப பெருமாள் கோயில் உள்ளிட்ட பழமையான 9 கோயில்கள் உள்ளதாகவும், அந்த கோயில்களுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புள்ள 35 ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கோயில்களின் சொத்துக்களை நிர்வகிக்க அறங்காவலர்களை நியமிக்கப்பட்டும், தனி நபர்களால் கோயில் சொத்துக்களை ஆக்கிரமிக்கப்பட்டும், அதன்மூலம் வரும் வருமானத்தை எவ்வித கணக்கும் வைக்காமல் செலவு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்பதால், 19ஆம் நூற்றாண்டு பழமை வாய்த்த கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு, கோயில்களை நிர்வகிக்க அறங்காவலர் குழு நியமிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:இடைத்தேர்தல்: பாஜகவின் தாமதமான நிலைப்பாடு.! ஈபிஎஸின் நடவடிக்கை என்ன..!