சேலம்: 29ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து சேலம் ஏற்காடு பிரதான சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம் மற்றும் அம்மாபேட்டை நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.
இதில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சட்டப்பேரவை உறுப்பினர்களான ராஜேந்திரன், ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தற்போது வெளிநாட்டு உணவான ஷவர்மா உட்கொள்வோர் பாதிக்கப்படும் நிகழ்வு தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு உணவு வகையான ஷவர்மா அந்தந்த நாட்டு தட்பவெட்ப நிலைக்கு ஏற்றதாக இருக்கும்.
மாறாக நம் நாட்டில் அதுபோன்ற உணவு வகைகள் முறையாக தயாரிக்கப்பட்டாலும், அந்த இறைச்சியை உட்கொள்வோருக்கு பாதிப்புகள் ஏற்படும். நம் நாட்டிலேயே பல்வேறு உணவு வகைகள் இருக்கும்போது ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவு வகைகள் உட்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் ஷவர்மா விற்பனைக்கடைகளில் தொடர் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முறையான தயாரிப்பு வசதிகள், தரமான உணவு வகைகள் இல்லாத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
'டாக்டர் அறிவுரையின்றி மருந்து வாங்காதீங்க': இதையடுத்து, திட்டக்குடியில் மருந்தகம் ஒன்றில் மாத்திரை வாங்கி உட்கொண்ட கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், ’’எந்த ஒரு சூழ்நிலையிலும் மருத்துவர் பரிந்துரைச்சீட்டு இன்றி பொதுமக்கள் மருந்தகங்களில் மருந்து வாங்குவது தவறு. தமிழ்நாடு சுகாதாரத்துறையின்கீழ் பொதுமக்கள் நலன் கருதி மக்களைத்தேடி மருத்துவம் உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற சூழலில் பொதுமக்கள் அதனை முறையாக பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்’’ என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 40 முதல் 50 ஆயிரம் பேர் வரை மக்கள் தொகை இருக்கின்ற சூழலில் அங்கு இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் கடந்த 8 ஆண்டுகளாக பிரேதப் பரிசோதனைக்கூடம் இல்லாதது கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கிற்கு ஒரு முன் உதாரணமாக இருப்பதாக அமைச்சர் விமர்சித்தார்.
சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து ஏற்காடு அரசு மருத்துவமனையில் ரூபாய் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய உடற்கூராய்வு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் சேலம் மாநகராட்சிப் பகுதியில் 32 நகராட்சி பகுதியில் 6 என முப்பத்து எட்டு புதிய மருத்துவமனைகள் தொடங்க உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்!