சேலம்: சேலத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தனராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த இரண்டு நாட்களாக லாரி உரிமையாளர்கள் பதற்றத்துடன் இருந்து வருகிறார்கள். கடந்த 11ஆம் தேதி சட்டமன்றத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும், காலாண்டு சாலைவரியை உயர்த்த நிலுவையில் மசோதா தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் கனரக வாகனங்கள், 6 லட்சம் லாரிகளை இயக்கமுடியாத சூழல் இருந்து வருகிறது. ஏற்கெனவே சுங்கக் கட்டணம், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவைகள் காரணமாக லாரிகளை இயக்க முடியாமல் இருந்து வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் அபராதம் விதித்து லாரிகளுக்கு அபராத தொகை தொடர்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் காவல்துறையிடம் எடுத்து உரைத்த பின்னர் 15 சதவீதம் குறைத்துள்ளனர். ஆனால் போக்குவரத்துதுறை அமைச்சர் காலாண்டு சாலைவரி உயர்வை தாக்கல் செய்துள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை மூடும் மந்திரமாகவே அறிவித்துள்ளனர். இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் தெரிவிக்கவில்லை. இதில், 15 ஆயிரம் கிலோ எடைக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திற்கும், ஒவ்வொரு 250 கிலோவிற்கும் 100 ரூபாய் வீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆறுசக்கர லாரிகளுக்கு 950 ரூபாய், 10 சக்கர லாரிகளுக்கு 2 ஆயிரத்து 100 ரூபாய், 12 சக்கர லாரிகளுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாய், 16 சக்கர லாரிகளுக்கு 4 ஆயிரத்து 500 என அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை செலுத்தும் நிலை உள்ளது. இதன்மூலம் 40 சதவீதம் அளவிற்கு வரி உயர்ந்துள்ளது.
இதுகுறித்து முறையிட்டபோது, அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அண்டை மாநிலத்தை ஒப்பிடும் அமைச்சர் டீசல் விலையை பொறுத்தவரை கர்நாடகாவில் 7.50 ரூபாய் குறைவாகவே உள்ளது. இவ்வாறு இருக்கும்போது, எவ்வாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஒப்பிடுகிறார் என்பது தெரியவில்லை” என்றார்.
மேலும் பேசிய அவர், “இதுகுறித்து தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப் போகிறோம். இதற்கு நல்லமுடிவு வரும் என்று காத்திருக்கிறோம். தமிழக அரசை பொருத்தவரை லாரி உரிமையாளர்கள் அனைவரும் தொழிலதிபர்கள் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்கள். அரசு எந்த நலத்திட்ட உதவிகள் அறிவித்தாலும், முதலில் கை வைப்பது லாரி உரிமையாளர்கள் மீது தான்.
தமிழகத்தில் வரிகட்டுவதை பொறுத்தவரை மற்ற தொழில்களைவிட, லாரி உரிமையாளர்கள் முன்னதாகவே வரி கட்டிவிட்டு தான் லாரியை இயக்குகிறார்கள். லாரி உரிமையாளர்கள் விஷயத்தில் எந்தவித தவறுகளும் நடைபெறாது. லாரி உரிமையாளர்கள் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே தமிழக அரசு காலாண்டு சாலை வரி உயர்வை நிறுத்தி வைத்து, லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
நாமக்கல்லில் எங்கள் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 135 அசோசியேஷன் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இதில், ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமா? அல்லது காலவரையறை அற்ற வேலை நிறுத்தமா? என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.
லாரி உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தினால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்களும் பொதுமக்களில் ஒருவர்தான். பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்க விரும்பவில்லை. தமிழக முதலமைச்சர் காலாண்டு சாலை வரியை நிறுத்தி வைக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு கோடி குடும்பங்கள் லாரி தொழிலை நம்பி வாழ்ந்து வரும் நிலையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
இது நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும். தமிழகத்தில் உள்ள இரண்டு கோடி குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் தமிழக முதலமைச்சரிடம் வைக்கிறோம். தமிழக அரசுக்கு எப்போது நிதி தேவைப்பட்டாலும் வரி உயர்வு என்பது வந்து விடுகிறது. இதற்கு முன்பாக, 19 ஆண்டுகளுக்கு முன்பு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அப்பொழுது இருந்த தொழில் வேறு. தற்போது லாரி தொழில் நசுங்கிப் போய்விட்டது. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, வாழ்வாதாரத்தை இழந்து லாரியை நிறுத்தும் நிலை தான் லாரி உரிமையாளர்களுக்கு இருந்து வருகிறது” என்று வேதனை தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழனி அருகே விஏஓ, காவலர்களை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி!