கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மத்திய பட்ஜெட் தாக்கலில், எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளைத் தனியாருக்கு விற்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. மத்திய அரசுக்கான நிதி திரட்டும் நடவடிக்கையாக இந்த விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எல்ஐசி ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று நாடு முழுவதும் எல்ஐசி ஊழியர்கள் ஒரு மணிநேரம் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக சேலம் காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள தலைமை எல்ஐசி அலுவலகத்தில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை அலுவலகப் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் எல்ஐசி பங்குகளைத் தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் எனவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் சேலம் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்ஐசி அலுவலகப் பணியாளர்கள் ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தோட்டத்தில் நுழைந்த ஒற்றை யானை - அச்சத்தில் பொதுமக்கள்