சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் அமைந்துள்ள குமரகிரி ஏரி அப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள், மனுக்களுக்கு பிறகு பல்வேறு அமைப்புகளின் உதவியால் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக சீரமைக்கப்பட்டது.
இதனையடுத்து உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. மேலும் இது ஏரியில் உள்ள நீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாது, நிலத்தடி நீருக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே விவசாயம் நடந்து வருவதால் இது இன்னும் பின்னடைவாக மாறியுள்ளது.
பல தன்னார்வ அமைப்புகள் மூலம் ஏரியானது தூர் நீக்கி சுத்தம் செய்யப்பட்டிருந்தாலும், தற்போதுள்ள நிலை முந்தைய நிலையைவிட மோசமானதாக மாறியுள்ளது.
இந்த பகுதியில் இருந்து பாசனத்திற்காக ஸ்மார்ட் சிட்டி அமைப்பின் கீழ் அமைந்துள்ள நண்ணீர் பாதையில் நீருக்கு பதிலாக கழிவுநீரே செல்கிறது, இதனால் இப்பகுதி நாற்றமெடுத்து பொதுமக்கள் செல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை பற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, தூர்வாரும்போதே எவ்வளவு அறிவுறுத்தியும் தன்னார்வ அமைப்புகள் மூலம் ஆகாய தாமரைகள் படரவிடப்பட்டதாகவும், இதனால் நீர் ஆவியாவது தடுக்கப்படும், நீர் சுத்திகரிப்பு நடக்கும் என்று காரணம் கூறியனர். இதுவே இப்பொழுது பெரும் பின்னடைவாகி ஏரி எங்கும் ஆகாயத்தாமரை படர்ந்து நீரை நாசமாகிவிட்டதாக வருத்தம் தெரிவித்தனர்.
மேலும், இங்கு சேகரிக்கப்படும் தண்ணீர் 4 பிரதான ஊர்களுக்கு தேவையான நீரை விநியோகம் செய்கிறது. ஏரி ஆக்கிரமிப்பு ஏற்கனவே நடந்திருந்த நிலையில், மீண்டும் நடக்க வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்கின்றனர்.
இது குறித்து இந்த ஏரியை சீர் செய்ய முயன்றுவரும் சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர், சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷை அணுகிய போது, மூக்கண்ஏரி மற்றும் அம்மாபேட்டை ஏரி இரண்டை பற்றியும் தகவல் அளித்தார்.
கரோனா ஊரடங்கு நிலை முடியும்வரை பாதுகாப்பு காரணமாகவே, தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து சுத்தம் செய்ய தாமதாகி வருகிறது. ஆகாயத்தாமரை நன்மையும் பயக்கும், தீமையும் பயக்கும், சொல்லப்போனால் அவை ஏரியில் உள்ள விஷத்தன்மையை உறிஞ்சும் குணமுடையவை. இதனால் ஏரி சுத்தமாக்கப்படும், மாறாக அவை இறந்து போய் அதே இடங்களில் இருந்தால்தான் ஆபத்தை விளைவிக்கும். புனரமைத்து சரி செய்த ஏரியை கவனக்குறைவு காரணமாக மாவட்ட நிர்வாகமே சீர்குலைத்து விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.
மேலும் அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த ஏரியை மாவட்ட நிர்வாகமே சீர் செய்யும் என்று அறிவித்த நிலையில், மக்களிடம் நன்கொடை பெற்று எந்த முதலீடும் இல்லாமல் சமூக பணி செய்து வரும் எங்களை போன்ற குழுக்கள் நன்கொடை பெற மக்களை அணுகினால், மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை மேற்கோள் காட்டி, எங்களை புறம்தள்ளுகின்றனர்.
ஏரியில் மீன் கூட்டுறவு சங்கங்களின் மூலம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் மீன் பிடித்து லாபம் பார்க்கும் தொழிலாளர்கள் பொறுப்பில் ஆகாயத் தாமரைகளை நீக்குவதும் அடங்கும். ஏரி சீர் செய்யும் சூழ்நிலை ஒவ்வொரு முறையும் மாறி வரும் என்று மாவட்ட நிர்வாகம் இதை குறித்து எந்தவித விழிப்புணர்வும் இன்றி செயல்படுகிறது.
மக்கள் தொகை அடர்த்தி அதிகம் உள்ள அம்மாபேட்டை பகுதியில் உள்ள அனைத்து கழிவுகளும் இந்த ஏரிக்கு திருப்பிவிடப்படுகிறது. இதனை சரி செய்ய ஆகாயத்தாமரைகளை கருவியாக பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. ஏரி ஆழப்படுத்தப்பட்டு அதன் கொள்ளவை விட அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது.
க்ரீன் ஷோன் எனப்படும் முறையில் புதிய மரங்கள் நடுவதை விட, இருக்கும் மரங்களை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஏரியின் உட்பகுதியில் தீவு போன்ற அமைப்புக்காக விடப்பட்ட மண் இந்த ஏரியை சுத்தம் செய்ய பயன்படுவது மட்டுமல்லாமல் புதிய மரங்கள் வளர வழிவகை செய்கிறது, பறவைகள் வந்து செல்லவும் ஏதுவாக இருக்கும். எனவே அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஏரியை மீட்டெடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர்.