சேலம்: எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை கூடுவது வழக்கம்.
இந்த நிலையில் தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்துக்கு இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், நேற்று அக்.30ஆம் தேதி அன்று கூடிய சந்தைக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கடந்த சில வாரங்களாக, 2,500 ஆடுகள் இங்கு விற்பனைக்கு வந்த நிலையில், ஒரே நாளில், 8,000க்கும் அதிகமான ஆடுகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், 3,000 பந்தய சேவல்கள், கோழிகளும் விற்பனைக்கு வந்திருந்தன.
சந்தையில் ஆடு ஒன்றின் விலை 5,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. சண்டை சேவல் ஒன்று 1,000 முதல் 6,000 ரூபாய் வரை விலை போனது. இங்கு பந்தய சேவல்கள் மோதவிடப்பட்டு அதற்கேற்ப விலை பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகைக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!