சேலம் அருகேயுள்ள கொண்டப்பநாயக்கன்பட்டியிலுள்ள சத்யா நகரில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள், 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில், கடந்த 18 வருடங்களாக இந்துக்கள் பயன்படுத்திவந்த இடுகாட்டை கிறிஸ்தவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என சேலம் வருவாய்த் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்து.
சில நாள்களுக்கு முன் இந்த இடுகாட்டில் கிறிஸ்தவர்கள் சவத்தை புதைக்கச் சென்றபோது இந்துக்கள் தடுத்துவிட்டனர். இந்நிலையில், இன்று சத்தியா நகரில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அப்பகுதியைச் சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அரசு சார்பில் கொடுக்கப்பட்ட இடுகாட்டில் எங்களுக்கும் இடமளிக்க வேண்டுமென கிறிஸ்தவர்கள் தெரிவித்தற்கு இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் கூட்டத்திலிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிறிஸ்தவ பெண் மீது கல்லை எறிந்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அரசு அலுவலர்கள் கன்னங்குறிச்சி காவல் துறையினரை வரவழைத்து கிறிஸ்தவர்களை வெளியேற்றினர்.
இதையடுத்து, கிராம சபைக் கூட்டம் ஒரு மணி நேர தாமத்திற்கு பின் மீண்டும் தொடங்கி நிறைவுபெற்றது. இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்துக்கள் தங்கள் பகுதி இடுகாட்டில் கிறிஸ்தவர்களைப் புதைக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
கூட்டுறவுச் சங்க மோசடி: ஊழியர்கள் உயர்மட்ட குழு விசாரணை கோரிக்கை