சேலம்: மேட்டூரை அடுத்த கோவிந்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மூன்று பேர், கடந்த 14ஆம் தேதி இரவு, தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையான அடிப்பாலாறு வனப்பகுதிகளில் வேட்டையாடுவதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
அதில் ஒருவர் தப்பியோடிய நிலையில், கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா என்பவர் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதனிடையே துப்பாக்கிச்சூடு நடந்த இடம் கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்றும், மான் வேட்டைக்கு சென்றபோதுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்றும் கர்நாடக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீனவர்களிடமிருந்து மான் இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி, பரிசல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்தனர்.
ஆனால் மீனவர்களை காணவில்லை என்பதால், கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாறு ஆற்றங்கரையில் தேடி வந்தனர். இந்த சம்பவத்தால் இருமாநில எல்லையில் பதற்றம் நிலவியது, போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று(பிப்.17) காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் அடிபாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் மிதந்து வந்தது. உடலை மீட்ட தமிழ்நாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மீனவர் ராஜா எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மீனவர் உயிரிழந்த சம்பவத்தால் தமிழக கர்நாடகா எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாறு வழியாக கர்நாடக - தமிழக எல்லையில் போக்குவர்த்து நிறுத்தப்பட்டுள்ளது.