சேலம் அடுத்த ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவருக்குத் திருமணமாகி 11 மாத பெண் குழந்தை உள்ளது.
மாதேஷ், சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்த ஆடி காரை எரித்த வழக்கில் மாதேஷை கைது செய்த காவல் துறையினர், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, கடந்த ஜூன் 10ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த அவர், ஆண்டிபட்டி பகுதியில் மீன் பண்ணை அமைத்து தொழில் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், மாதேஷ் தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து மீன் பண்ணைக்கு சென்றுள்ளார்.
பின்னர், மீண்டும் வீட்டிற்கு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, ஆண்டிபட்டி ஏரி அருகில் உள்ள பறையன் காடு பகுதியில், காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாதேஷை வழிமறித்து நிறுத்தி உள்ளனர்.
பின்னர், காரிலிருந்து இறங்கிய நபர்கள் மாதேஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உடன் சென்ற வெங்கடேஷ் கும்பலிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
பணம் கொடுக்கல்-வாங்கல் விவகாரத்தில் மாதேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகமடைந்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.