சேலம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சேலத்தில் நாட்டாமை கழக கட்டிடம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், தொகுப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக்கூலியில் பணி புரியும் ஆசிரியர்கள் சத்துணவு அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர், ஊர் புற நூலகர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அது மட்டுமின்றி, முதலமைச்சர் பங்கேற்ற வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில், முதலமைச்சரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர் அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு வாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: போராட்டத்தில் இறங்கும் ஜாக்டோ-ஜியோ; தமிழக அரசுக்கு சிக்கல்!