நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அமுதா என்ற ஓய்வுபெற்ற செவிலி, செல்போன் மூலம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக பேசிய ஆடியோ வெளியாகி தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து அமுதா உட்பட இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் இன்று விசாரித்துவருகிறார். குழந்தைகளுக்கு போலியாக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது தொடர்பாக ராசிபுரம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்த நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ரமேஷ் சேலம் சிபிசிஐடி காவல் துறையினர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ரமேஷ் நேரில் ஆஜராகினார். அவரிடம் பச்சிளம் குழந்தைகளுக்கு போலியாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தனியார் மருத்துவமனைகளில் பிறப்புச் சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நடைபெற்றுவரும் ஆய்வில் ஏற்கனவே ஆவணங்கள் கிடைத்துள்ளதால், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் ரமேஷிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "போலிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இது தொடர்பாக விசாரணைக்கு நேரில் அழைத்தனர். இதற்கான விளக்கம் கொடுத்துள்ளேன். விசாரணை நடைபெற்றுவருகிறது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது" என்றார்.