சென்னை: ஃபெஞ்சல் புயலில் நேரிட்ட மழை வெள்ளத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்த சக்திவேல் குடும்பத்தாருக்கு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30ஆம் தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. அப்போது சென்னை வேளச்சேரியில் மின்சாரம் தாக்கியதில் சக்திவேல் என்பவர் உயிரிழந்தார்.உயிரிழந்த சக்திவேல் குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.இந்த நிலையில் இன்று வேளச்சேரியில் உள்ள சக்திவேல் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் கூறினார். மேலும் அரசு அறித்த நிவாரண உதவி தொகையாக 5 லட்சத்திற்கான காசலோலையை சக்திவேல் குடும்பத்தினரிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், “மின் விபத்தில் உயிரிழந்த சக்திவேலின் மகள் கல்வி செலவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி உதவி அளிக்கப்படுகிறதா என்பது குறித்து முறையாக கண்காணிக்கப்படும். மாணவியின் உயர்கல்வி, மற்றும் சக்திவேல் மனைவி பரமேஸ்வரிக்கான நிதியுதவி உள்ளிட்டவை அரசின் திட்டங்கள் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: "நீர்நிலைகளும், கால்வாய்களும் தூர்வாரப்படாததே வெள்ளத்துக்கு காரணம்"- பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,“கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இது வரை மொத்தம் 52,421 முகாம்கள் மூலம் 28 லட்சத்து 42 ஆயிரத்து 528 பேர் பயனடைந்துள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். மழைகாலத்தில் நோய்களால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவ முகாம்களிலும், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.மழைகாலம் முடிவடையும் வரையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்,” என்றார்.