திருநெல்வேலி: ஊழல் புகாரில் சிக்கிய ஜஹாங்கீர் பாஷாவை திருநெல்வேலி மாநகராட்சியில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா, கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கினார். ரயில் நிலையத்துக்கு காரில் சென்றபோது அவரை மடக்கி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தபோது, கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் பணம் கட்டுகட்டாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி உதவி கமிஷனராக நியமனம்: தொடர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு அவர் மாற்றப்பட்ட நிலையில், லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய 2 வாரத்தில், ஜஹாங்கீர் பாஷா திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
வழக்கமாக அரசு அலுவலர்கள், அதிகாரிகள் இது போன்று லஞ்ச புகாரில் சிக்கி வழக்குப் பதிவு செய்யப்பட்டால், நீண்ட நாள் விசாரணையின் முடிவுக்குப் பிறகே அவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்படும். ஆனால். ஜஹாங்கீர் பாஷா விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டே வாரத்தில் மீண்டும் அவருக்கு உயரிய பதவி வழங்கப்பட்டது எப்படி என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக, ஜஹாங்கீர் பாஷா ஏற்கனவே திருநெல்வேலி மாநகராட்சியில் பல ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
மாநகராட்சி ஆணையர் மறுப்பு: சமீபத்தில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்க வந்த ஜஹாங்கீர் பாஷாவை, பொறுப்பேற்க விடாமல் மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா அதிரடியாக திருப்பி அனுப்பியுள்ளார். தங்கள் மீது ஊழல் புகார் பதிவு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநரிடம் ஆட்சேபனை கடிதம் வாங்கிவிட்டு பணியில் சேர வரும்படி ஆணையர் உத்தரவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார்.
இது குறித்து திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சுகபுத்ராவை ஈடிவி பாரத் சார்பில் பிரத்யேகமாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, “ஜஹாங்கீர் பாஷா உதவி ஆணையராக பொறுப்பேற்க நியமன உத்தரவுடன் வந்தார். ஆனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் பொறுப்பேற்க அனுமதிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய ஊட்டி நகராட்சி ஆணையர் திருநெல்வேலி உதவி கமிஷனராக நியமனம்!
ஆட்சியரிடம் மனு: இந்நிலையில் ஜஹாங்கீர் பாஷாவை திருநெல்வேலி மாநகராட்சியில் பொறுப்பேற்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில், சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று (நவ.02) திங்கட்கிழமை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளரும், சமூக ஆர்வலருமான அய்கோ ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது, “ நெல்லை நிர்வாகத்தில் தூய்மை வரவேண்டும் என்பது எங்களது விருப்பம். உதகை நகராட்சி ஆணையராக இருந்த ஜஹாங்கீர் பாஷா மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்த 20 நாட்களுக்குள், திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி தண்ணீரை குடித்து வளர்ந்த தன்மானமிக்க மக்கள், முற்றிலும் ஊழல் மையப்பட்ட ஒருவரை ஏற்க மாட்டார்கள். ஜஹாங்கீர் பாஷா பிடிப்பட்ட சமயத்தில், அவரது வாகனத்தை ஒட்டியவர், யார் யாரிடம் சென்று பணம் வாங்கியுள்ளனர் என்ற விவரத்தை கூறியுள்ளார். இது விசாரணைக்கு உட்பட்டது என்றாலும், முறையான விசாரணை பெற்று, அவர் மீது குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்ட பிறகு எங்கள் பூமிக்கு வந்தால் மனப்பூர்வமாக வரவேற்போம். மற்றபடி அவரை உதவி ஆணையராக நியமிப்பதில் நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.
முற்றுகை போராட்டம்: மீறி அவரை உதவி ஆணையராக நியமித்தால் அனைத்து மக்களையும் திரட்டி தாமிரபரணி தூய்மைக்காக பாடுபடுவதைப் போல, நெல்லை நிர்வாகத்தின் தூய்மைக்காக முற்றுகை போராட்டம் நடத்துவோம். குற்றம் செய்து நேரடியாக பிடிபட்ட நிலையில், விசாரணை அதிகாரி நிலுவையில் விசாரணையை வைத்திருக்கும் போது, அவரை மற்ற இடத்திற்கு மாற்றுவது அதிகாரிகளுக்கு தெரிந்து நடக்காமல் இருக்காது.
இதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும். அதேபோல், அரசும் தன்னிலை விளக்கத்தை தர வேண்டும். பொறுப்பேற்க வந்த உதவி ஆணையரை, மாநகராட்சி ஆணையர் பணியில் நியமிக்காமல், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநரிடம் ஆட்சேபனை கடிதம் வாங்கிவிட்டு பணியில் சேர வரும்படி உத்தரவிட்டு திருப்பி அனுப்பியுள்ளது வரவேற்காது. ஆணையர் இதே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.
ஊழல் கறையோடு வந்த அதிகாரி: ஜஹாங்கீர் பாஷார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்பட வேண்டும். நிரூபிக்காமல் தூய்மையானவர் என்று தெரிந்தால் மட்டுமே பணியில் அனுமதிக்க வேண்டும். ஊழல் செய்த அதிகாரியை ஊழல் ஈரம் காயும் முன்பே எங்கள் பகுதியில் நியமிப்பது தன்மானத்திற்கு இழுக்கு. இது மக்களை மதிக்காத செயலாக நாங்கள் கருதுகிறோம். இது மிகவும் கசப்பான அனுபவத்தை தருகிறது. எனவே, அரசு இதனை கட்டாயம் பரிசளித்து மாற்று நடவடடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.