கோயம்புத்தூர்: விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தைக்குச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது, அப்பகுதி மக்கள் சேற்றை வீசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்றரை ஆண்டுக்கால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ்தான் இது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதாவது, ஃபெஞ்சல் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 51 செ.மீ மழைப் பதிவானது. அதனால் விழுப்புரம் மாவட்டம், சாத்தனூர் அணை நிரம்பியதைத் தொடர்ந்து, அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் நள்ளிரவில் வினாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் வெள்ளநீர் புகுந்ததால், தங்களை மீட்க யாரும் வரவில்லை என்று கூறி இருவேல்பட்டு பகுதி மக்கள் அருகே உள்ள விழுப்புரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்களை சமாதானப்படுத்தச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சிலர் சேற்றை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்றரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் அளித்த சான்றிதழ்தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு pic.twitter.com/CD59llwTSU
— Vanathi Srinivasan (@VanathiBJP) December 3, 2024
தற்போது, இதுகுறித்து பாஜக மகளிர் அணியின் அகில இந்திய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான பொன்முடி பேச்சு வார்த்தை மேற்கொள்ளச் சென்றுள்ளார்.
அப்போது, காருக்குள் அமர்ந்தவாறே அமைச்சர் பொன்முடி மக்களிடம் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த மக்கள், "காரை விட்டு இறங்கி வர மாட்டீர்களா?" எனக்கூறி, அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியுள்ளனர். எதிர்பாராத விதமாக அளவுக்கு அதிகமான மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நிர்வாகத் திறனற்ற மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசின் செயலற்ற தன்மையால் பெருமழை பாதிப்பிலிருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
இதையும் படிங்க: "பொன்முடி மீது சேறு வாரி வீசியது ஒரு கட்சியினர் தான்"- அமைச்சர் பரபரப்பு பேட்டி!
முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சில இடங்களுக்கு சென்று படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனரே தவிர, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இதனால் திமுக அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு. கடந்த மூன்றரை ஆண்டுக்கால திமுக அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய சான்றிதழ்தான் அமைச்சர் பொன்முடி மீதான சேறு வீச்சு.
இனியாவது அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினர் மக்களை மதிக்க வேண்டும். உணவு, குடிநீருக்காகப் போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்து கொண்டு பேசும் மகாராஜா மனப்பான்மையிலிருந்து திமுக அமைச்சர்கள் வெளியே வர வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் இந்த கோபம் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.