திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் காதலியின் சகோதரரிடம் திருமணம் குறித்து பேசவார்த்தை நடத்த சென்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சார்ந்தவர் விஜய் (வயது 25). இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா கீழ தெருவை சேர்ந்த புஷ்பராஜ் (எ) சிம்சனின் சகோதரி ஜெனிபர் சரோஜாவை (வயது 23) காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் சமூக ஊடங்கள் மூலமாக பேச தொடங்கி, பின் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜெனிபர் சரோஜா தனது காதலனை பார்ப்பதற்காகவும், அவரோடு சேர்ந்து வாழ்வதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்குறிச்சிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு விஜயின் சகோதரி கணவரைப் பிரிந்து ஏற்கனவே அங்கே வாழும் நிலையில் விஜயின் பெற்றோர், உங்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி ஜெனிபர் சரோஜாவை மீண்டும் திருநெல்வேலிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரின் திருமணத்திற்கு ஜெனிபர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் காதலனை மறக்க முடியாமல் ஜெனிபர் சரோஜா கடந்த நவ.28ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சரோஜாவின் சகோதரர் புஷ்பராஜ் என்ற சிம்சன் விஜயை திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக நம்பி இன்று (டிச.2) காலை ரயில் மூலம் விஜய் திருநெல்வேலி வந்தடைந்துள்ளார். இந்நிலையில், காலை 7:30 மணிக்கு ரயில் நிலையத்திலிருந்து வாடகைக்கு குடியிருக்கும் சாந்தி நகர் 24வது தெருவிற்கு விஜயை சிம்சன் அழைத்து வந்துள்ளார்.
மேலும் இது குறித்து நம்மிடம் பேசிய போலீசார், "விஜய்-சிம்சன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த பழைய கட்டிடப் பொருட்களைக் கொண்டு தாக்கியும், அரிவாளால் வெட்டியும் விஜய்யை படுகொலை செய்துள்ளதாக தெரிகிறது. விஜயின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எங்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோபிசெட்டிபாளையம் அருகே துப்பாக்கி சூடு: ஒருவர் பலி! போராட்டத்தில் உறவினர்கள்..
இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாநகர காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். அதில் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டனர்,"என்றனர்.
தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ஆனந்தி சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி கைரேகைகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றி சென்றுள்ளார். பாளையங்கோட்டை காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் புஷ்பராஜ் என்ற சிம்சன் மற்றும் அவரது நண்பர் சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.