நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு ஓய்வூதியத் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வட்டார உதவி வேளாண்மை இயக்குநர் சாந்தி, பிரதம மந்திரி கிஷான் மன்தன் யோஜனா ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
இது தொடர்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கூறுகையில், 'சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டார பகுதியில் நீர் முள்ளிக்குட்டை, சந்திர பிள்ளை வலசு, கோலாத்துக் கோம்பை, வேட்டைக்காரனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு பனை விதைகள் நடவு செய்ய விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயிகள் தங்களுடைய 60 வயதிலிருந்து ஓய்வூதிய பயன்பெற பிரதம மந்திரி கிஷான் மன்தன் யோஜனா திட்டத்தை பாரதப் பிரதமர் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் 60 வயதுக்குப் பிறகு விவசாயிகள் மாதம்தோறும் ரூ.3000 ஓய்வூதியம் பெறுவார்கள். இந்தத் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள சிறு குறு விவசாயிகள் இணையலாம். இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் மாதம்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
61 வயது முதல் மாதம் தோறும் விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் ரூ.3000 ஓய்வூதியம் பெறுவார்கள். பிரீமியம் செலுத்தும் விவசாயிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்தில் தொடர விருப்பம் இல்லை என்றால் கட்டிய பணத்தை வட்டியுடன் திரும்பப் பெறும் வசதி உள்ளது. எனவே இது தொடர்பாக அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு விவசாயிகள் சென்று தங்களது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.