சேலம்: சேலம் கோட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியானது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து செயல்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கட்சி என்பதால் இன்றளவும் மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.
தமிழகத்தில் மட்டும் இந்த ஆண்டு புதியதாக ஐந்து லட்சம் உறுப்பினர்களைக் கட்சியில் இணைத்துள்ளனர். டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் புதிய அலுவலக கட்டடம் ரூபாய் 20 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் அந்த புதிய அலுவலக கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது. அதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அழைக்க உள்ள நிலையில், இந்திய கூட்டணியில் இடம் பெற்றுள்ள 28 கட்சித் தலைவர்களையும் அழைக்க உள்ளோம்.
தற்போது, ராமநாதபுரம் தொகுதியில் சிறப்பாக மக்கள் பணியாற்றி வரும் இந்திய முஸ்லீம் லீக் கட்சி, வரும் காலங்களிலும் வெற்றி பெற்று மக்களுக்கான பணியைத் தொடருவோம் என நம்பிக்கை உள்ளது. மேலும், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி மட்டும் இல்லாமல் மற்றொரு தொகுதியையும் திமுக கூட்டணி தர வேண்டும் என்று கேட்க உள்ளோம். அதற்காகத் தமிழக முதல்வரை விரைவில் சந்தித்துப் பேச உள்ளோம்.
இந்திய கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். அதற்கான அடிப்படை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிறகு தான் பிரதமரைத் தேர்ந்தெடுப்போம். தற்பொழுது, பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் இந்திய கூட்டணிக்கு இல்லை.
சென்னையில் கனமழை பெய்தது இயற்கையானது. ஆட்சியில் யார் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க முடியும் என்பது தான் உண்மை. மழை வெள்ள பாதிப்பு அதிகம் தான், அதிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கத் தமிழக அரசு மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்து வருகிறது.
மத்திய அரசிடம் இருந்து நிவாரண தொகையாக ரூபாய் 5,000 கோடி தமிழக அரசு கேட்டுள்ளது. அதனை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் வெள்ளம் என்றவுடன் மத்திய அமைச்சர்கள் வந்து நேரடியாகப் பார்த்தது வரவேற்கத்தக்க ஒன்று. ராஜ்நாத் சிங் செயல் பாராட்டக்கூடியது. அவர்கள் அறிவித்துள்ள நிவாரணத் தொகை பற்றாது. தமிழக அரசு கேட்டுள்ள தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் கஞ்சா செடிகள் வளர்ப்பு.. வெவ்வேறு இடங்களில் இருவர் கைது!